< Back
உலக செய்திகள்
நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசந்தா
உலக செய்திகள்

நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசந்தா

தினத்தந்தி
|
25 Dec 2022 10:01 PM IST

நேபாளத்தில் புதிய அரசை அமைப்பதற்கு நடந்து வந்த முயற்சிகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் பிரதமர் பிரசந்தா மீண்டும் பிரதமராகவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.

எனினும் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஷேர் பகதூர் தூபா இறங்கினார்.

அதன்படி முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா தலைமையிலான சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி உள்பட 5 கட்சிகள் கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

அரசை அமைப்பதில் சிக்கல்

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசந்தா, ஷேர் பகதூர் தூபாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புதிய அரசின் 5 ஆண்டு பதவிக் காலத்தில் முதல் 2½ ஆண்டுகளுக்கு தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு தூபாவிடம் பிரசந்தா கேட்டுக்கொண்டாா்.

ஆனால் தூபா அதனை ஏற்கவில்லை. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, பிரசந்தாவின் சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி தூபா தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியது. தூபாவின் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதிய அரசை அமைப்பதில் சிக்கல் எழுந்தது.

புதிய கூட்டணி உருவானது

அதை தொடர்ந்து, பிரசந்தா முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலியின் சிபின்-யுஎம்எல் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

அதன்படி சிபிஎன் யுஎம்எல், சிபிஎன் எம்சி, ஆர்எஸ்பி, ஆர்பிபி, ஜேஎஸ்பி, ஜனமத் மற்றும் நகரிக் உன்முக்தி கட்சி ஆகிய கட்சிகளுடன் புதிய கூட்டணி உருவானது. இந்த கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 163 உறுப்பினர்களை கொண்டு உள்ளது.

பிரசந்தா தலைமையில் அரசு

இந்த நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரசந்தா, கேபி சர்மா ஒலி மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதில் பிரசந்தாவுக்கும் கேபி சர்மா ஒலிக்கும் இடையே சுழற்சி முறையில் அரசாங்கத்தை வழிநடத்த ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது. மேலும் பிரசந்தாவின் கோரிக்கையின்படி முதல் வாய்ப்பிலேயே அவரை பிரதமராக்க சர்மா ஒலி ஒப்புக்கொண்டார்.

அதன்படி பிரசந்தா தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கான சட்ட ஆவணத்தில் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் 165 பேரும் கையெழுத்திட்டனர். அதனை ஜனாதிபதியிடம் சமர்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்