< Back
உலக செய்திகள்
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 111 பேர் பலி
உலக செய்திகள்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 111 பேர் பலி

தினத்தந்தி
|
19 Dec 2023 6:37 AM IST

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையகம் தெரிவிக்கின்றது.

பீஜிங்,

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவிக்கின்றது.

இதில், பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்து உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அமெரிக்க புவியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், கன்சு மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மற்றும் லான்ஜவ் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்து உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்