பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு
|பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
மணிலா,
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள சுல்தான் குடாரத் மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்து அதன்பின்னர் 7.1 ஆக உயர்ந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடலோர நகரமான பாலிம்பாங்கிலிருந்து தென்மேற்கே 133 கிலோமீட்டர் தொலைவில் 722 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிண்டானாவோவ் நகரிலும், டவாவோ, ஆக்சிடெண்டல், டாவோ ஓரியண்டல், சாராங்கனி, டாவோ டி ஓரோ, டாவோ டெல் நோர்டே மற்றும் கோடாபாடோ ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.