நியூசிலாந்தில் சூறாவளியை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
|நியூசிலாந்தில் கேப்ரியல்லா சூறாவளியை தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல்லா சூறாவளியால் கனமழை, பெருவெள்ளம் என மக்களின் வாழ்க்கை புரட்டி போடப்பட்டது. அந்நாட்டு வரலாற்றில் 3-வது முறையாக தேசிய அளவிலான அவசரநிலை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆப் ப்ளென்டி பகுதி, ஓபோடிகி, வகாதனே மாவட்டம், வைகாடோ பகுதி, தேம்ஸ்-கோரமண்டல், ஹவுராக்கி மாவட்டம், வைகாடோ மாவட்டம், தாராருவா மாவட்டம், நேப்பியர் சிட்டி மற்றும் ஹேஸ்டிங்ஸ் மாவட்டம் ஆகியவற்றில் முன்பே உள்ளூர் அளவிலான அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
சூறாவளி புயலை முன்னிட்டு குழந்தைகள், முதியவர்கள் உள்பட 2,500 பேரை வேறு இடங்களுக்கு அரசு குடிபெயர செய்து உள்ளது. இதுதவிர, ஹாவ்கே பே பகுதியில் வெள்ள நீர் மற்றும் புயல் பாதிப்பில் சிக்கி தவித்த 9 ஆயிரம் பேர் மீட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்காக 11 ராணுவ வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சூறாவளி தாக்கத்திற்கு பெண்ணின் வீடு மீது வங்கி ஒன்று இடிந்து விழுந்து உள்ளது. இதில் அவர் பலியானார். அந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதுகாப்பு படை, மீட்பு படை மற்றும் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள், நூற்றுக்கணக்கானோரை மீட்டனர். சில இடங்களில் வீட்டின் மேற்பகுதி வரை வெள்ளம் உயர்ந்து காணப்பட்டது.
புயலால், பல இடங்களில் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால், மக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தேடி சமூக ஊடகத்தில் விவரங்களை பதிவிட்டனர்.
சூறாவளியை முன்னிட்டு கிழக்கு கடலோர பகுதியில் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பும் என்றும் நாளை (வியாழ கிழமை) வரை மத்திய நியூசிலாந்து பகுதியில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து வடகிழக்கே 78 கி.மீ. தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. சூறாவளி புயலால் மக்கள் இடம் பெயர்ந்து நிவாரண பகுதிகளில் தங்க வைக்கப்பட்ட நிலையில், காணாமல் போன உறவினர்களையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில், அந்நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் கூடுதல் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டு உள்ளது.