சீனாவில் ரிக்டர் 5.2 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
|நிலநடுக்கத்தால் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங்,
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11.27 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.
சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் நிலநடுக்கத்தின் அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த நிலநடுக்கம், நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு பல்வேறு அளவிலான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாவோஷனின் துணை மேயர் ஜாங் யுனி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறினார்.