ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் பல இடங்களில் மின்வெட்டு: ஜெலென்ஸ்கி
|உக்ரைனின் பல நகரங்களில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
கீவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் பெரிய அளவிலான உயிரசேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த போரில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அவ்வாறு கடந்த மார்ச் மாதம் ரஷிய ராணுவம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில், அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது.
இந்த நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் முழுவதும் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால், பெரும்பாலான பகுதிகளில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கீவ் பிராந்தியம் மற்றும் தலைநகரம், எல்விவ் பகுதி, ஒடெசா மற்றும் பிராந்தியம், கெர்சன் மற்றும் பிராந்தியம், வின்னிட்சியா பகுதி மற்றும் டிரான்ஸ்கார்பதியா ஆகிய பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முழுவீச்சுடன் ரஷியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருவதாகவும், இதனால், அவர்களின் ஏவுகணைகள் குறைந்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியின் செயல்பாடுகள் ரஷியாவிற்கும் அதன் குடிமக்களுக்கும் நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.