ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
|நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்திய பொருட்களை கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் உள்ளது.
வாஷிங்டன்:
ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் குத்தகை அடிப்படையில் இந்தியா நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது நீண்ட கால குத்தகையை பெற்றிருக்கிறது. இதன்மூலம் சபஹர் துறைமுகத்தை இந்தியா தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க உள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இரு நாடுகள் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
எரிசக்தி வளம் மிக்க ஈரானின் தெற்கு கடற்கரையில் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓமன் வளைகுடாவில் சபஹர் துறைமுகம் உள்ளது. கடல்வழி பாதை, தரைவழி சாலை மற்றும் ரெயில் பாதையை உள்ளடக்கிய சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை பயன்படுத்தி, நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்திய பொருட்களை கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் உள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சரக்குகளை அனுப்ப முடியும். ஆனால் பாகிஸ்தான் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சபஹர் துறைமுகத்தை பயன்படுத்துவதால் போக்குவரத்து செலவும் கணிசமாக குறைகிறது. எனவே, மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்த துறைமுக ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான எந்தவொரு வணிக ஒப்பந்தமாக இருந்தாலும், பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான 'சாத்தியமான ஆபத்து' என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சபஹர் துறைமுக ஒப்பந்தம் மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் விஷயத்தில், இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளை தெரிவிக்கும்படி கேட்போம். ஈரான் மீதான அமெரிக்க தடைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
ஈரானுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும், அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிப்பதற்கு சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இதை நாங்கள் பல நிகழ்வுகளில் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.