ஊழல் குற்றச்சாட்டு: போர்ச்சுகல் பிரதமர் ராஜினாமா...!
|ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
லிஸ்பன்,
தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு போர்ச்சுகல். இந்நாட்டின் பிரதமராக அண்டனியோ காஷ்டா செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, அந்நாட்டில் உள்ள லித்தியம் சுரங்கங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் அண்டனியோ காஷ்டா, மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள முக்கிய மந்திரிகள் உள்பட பலரின் வீடுகளில் அந்நாட்டு ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் பிரதமர் அண்டனியோவின் நெருங்கிய நபர்கள் 2 பேரை ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிரதமர் அண்டனியோ பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரதமர் அண்டனியோ தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதிபரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அண்டனியோ, இந்த சூழ்நிலையில் நான் எனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.