போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி - 18-ந் தேதி வரை சந்திப்புகள் ரத்து
|போப் ஆண்டவரின் சந்திப்புகள் அனைத்தும் 18-ந் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
ரோம்,
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் 2 தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் குடல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
அதன்பேரில் நேற்று முன்தினம் அவர் அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ஏற்கனவே முன்பு செய்து கொண்ட அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்திசுவை நீக்கவும், குடல் இறக்கத்தை சரி செய்யவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சைக்குப்பின்னர் போப் ஆண்டவர் இரவில் நிம்மதியாகத் தூங்கினார். நேற்று வழக்கம்போல கண்விழித்தார். இந்த தகவலை வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்தியோ புருனி தெரிவித்தார்.
போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை தொடர்பாக ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியின் வயிறு மற்றும் நாளமில்லா அறிவியல்கள் துறையின் இயக்குனர் டாக்டர் செர்ஜியோ அல்பீரி கூறுகையில், " போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேறு நோய் எதுவும் கண்டறியப்படவில்லை. அவர் கண் விழித்தார். உஷாராக இருக்கிறார். அடுத்த அறுவை சிகிச்சையை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று தமாஷ்கூட செய்கிறார்" என தெரிவித்தார்.
போப் ஆண்டவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஏற்கனவே பெருங்குடலில் 33 செ.மீ.அளவுக்கு வெட்டி அகற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது. போப் ஆண்டவர் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் 10-வது மாடியில் உள்ள அவருக்கான சிறப்பு அறையில் மேலும் பல நாட்கள் தங்கி இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சந்திப்புகள் அனைத்தும் 18-ந் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.