பப்புவா நியூ கினியாவில் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் - மோதலை கைவிட பழங்குடியினருக்கு வேண்டுகோள்
|பப்புவா நியூ கினியாவை சிதைத்து வரும் பழங்குடியின மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.
போர்ட் மோர்ஸ்பி
போப் ஆண்டவர் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து பப்புவா நியூ கினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு நேற்று சென்றார்.போப்ஆண்டவரை பழங்குடி மக்கள் ஆடி பாடி வரவேற்றனர். பின்னர் அவர் கவர்னர் ஜெனரல் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்தார்.
பினனர் அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசியதாவது:-
பப்புவா நியூ கினியாவின் மக்களின் பன்முகத்தன்மையைக் கண்டு வியப்படைகிறேன். இங்கு சுமார் 800 மொழிகள் பேசப்படுகின்றன. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நீண்ட காலமாக நடைபெறும் மோதல் கவலை அளிக்கிறது. பழங்குடியினர் இடையேயான மோதலை கைவிட வேண்டும். "பழங்குடியினரின் வன்முறை முடிவுக்கு வரும் என்பது எனது நம்பிக்கையாகும். ஏனெனில் இது பல விதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, மக்கள் நிம்மதியாக வாழ்வதைத் தடுக்கிறது. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
பொது நலனுக்காக மக்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களை தியாகம் செய்து "உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யவும், கண்ணியமான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் செய்ய வேண்டும். "பப்புவா நியூ கினியாவின் வளங்கள் "முழு சமூகத்திற்கும் கடவுளால் விதிக்கப்பட்டவை" "வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பெரிய சர்வதேச நிறுவனங்கள் இந்த வளங்களைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டிருந்தாலும், வருவாயை விநியோகிக்கும்போதும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போதும் உள்ளூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொள்வது நல்லது" .இவ்வாறு அவர் கூறினார்.
பப்புவா நியூ கினியாவுக்கு சென்றுள்ள 2-வது போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார். இதற்கு முன்பு போப் ஆண்டவர் ஜான்பால் 1984-ம் ஆண்டு இந்நாட்டுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.