போப் பிரான்சிஸ் பதவி விலகுகிறாரா?
|தான் பதவி விலகுவது பற்றி யோசிக்கவில்லை என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேட்டி அளித்துள்ளார்.
ஒட்டாவா,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகலாம் என தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இந்த நிலையில் கனடாவில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ், பயணத்தை முடித்துக்கொண்டு விமானத்தில் வாடிகனுக்கு புறப்பட்டார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது போப் ஆண்டவர் பிரான்சிஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் இது போன்ற பயணங்களை தொடர முயற்சிக்கிறேன். மக்களுடன் நெருக்கமாக இருக்க முயற்சிக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சேவை. ஆனால் இதற்கு மேல் என்னால் இதை செய்ய முடியாது. பயணம் செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை.
நான் பதவி விலகுவது பற்றி யோசிக்கவில்லை, ஆனால் அதற்கான கதவு திறந்தே உள்ளது, போப் பதவி விலகுவதில் தவறில்லை. அது விசித்தரமானதோ அல்லது பேரழிவோ அல்ல. நீங்கள் உங்கள் போப் மாற்றலாம்.
என்னுடைய இந்த வயதிலும், உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும், தேவாலயத்துக்கு சேவை செய்ய நான் எனது ஆற்றலை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு மாறாக, இதில் இருந்து ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி யோசிக்க வேண்டும்.
இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.