< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி: பொதுமக்கள் கருத்து

கோப்புப்படம்

உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி: பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
25 Sept 2023 5:08 AM IST

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கருத்து கணிப்பு

அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட வரிந்து கட்டி நிற்கின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர்.

சூடுபிடித்த தேர்தல் களம்

மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.

74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்