< Back
உலக செய்திகள்
உக்ரைனுக்கு ராணுவ டாங்கி கொடுத்த போலாந்து - கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி ரஷியா அதிரடி...!
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ராணுவ டாங்கி கொடுத்த போலாந்து - கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி ரஷியா அதிரடி...!

தினத்தந்தி
|
26 Feb 2023 12:53 PM IST

ரஷியாவில் இருந்து குழாய் மூலம் போலாந்திற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வந்தது.

வார்சா,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 368-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இதனிடையே, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஏற்கனவே 4 ராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் ஆயுதங்களை விரைவில் வழங்க உள்ளதாகவும் போலாந்து பிரதமர் மெடூசி மொரவிஹி கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் போலாந்துக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கிருந்து ரகசியமாக ரெயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அவரது கீவ் பயணம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போலாந்திற்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா இன்று அதிரடியாக நிறுத்தியுள்ளது. துர்ஷா பைப் லைன் வழியாக விநியோகிக்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா இன்று நிறுத்தியுள்ளதாக போலாந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

போரில் உக்ரைனுக்கு ராணுவ டாங்கி வழங்கியதற்கு பதிலடியாக போலாந்திற்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. ரஷியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் போலாந்தில் கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்