இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன் - புலனாய்வில் அசத்திய சீன போலீசார்..!!
|இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு செய்து திருடனை போலீசார் கண்டுபிடித்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.
புஜியான்,
சீனாவில் குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு செய்து திருடனை போலீசார் கண்டுபிடித்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ என்ற இடம் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் பூட்டி இருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கைவரிசை காட்டி விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளார்.
இதுபற்றி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் பால்கனி வழியாக வீட்டுக்குள் திருடன் நுழைந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாரும் பால்கனி வழியே வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் திருட்டு நடந்திருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டு சமையலறையில் திருடன் நூடுல்ஸ் மற்றும் முட்டை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. மேலும் வீட்டின் சுவற்றில் கொசுவின் ரத்தக்கறை படிந்து இருந்ததையும் அதன் அருகே 2 கொசுக்கள் இறந்து கிடந்ததையும் போலீசார் பார்த்தனர்.
புதிதாக வர்ணம் பூசப்பட்ட வீடு என வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் தன்னை கடித்த கொசுவை திருடன் சுவற்றுடன் நசுக்கி இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதனால் கொசு நசுக்கப்பட்டு இருந்த சுவற்றில் படிந்திருந்த ரத்தக்கறை தடயவியல் ஆதாரமாக எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் கிடைத்த டிஎன்ஏ முடிவை அந்த பகுதியில் குற்றபின்னணி கொண்ட திருடர்களின் டிஎன்ஏ விபரங்களுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது குற்ற பின்னணி கொண்ட சாய் என்ற பெயர் கொண்ட நபரின் ரத்தத்தின் டிஎன்ஏவும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரத்தக்கறையின் டிஎன்ஏவும் பொருந்தியது. பின்னர் சாய் அந்த வீட்டில் நுழைந்து திருடியதை போலீசார் உறுதி செய்து கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.