கலாச்சார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு - அதிர்ச்சி சம்பவம்
|கலாச்சார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட பை கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்டாக்ஹோம்,
ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 5 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலாசார நிகழ்ச்சியின் கடைசி நாள் விழா நேற்று ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று ஈரான் நாட்டை சேர்ந்த பிரபரல பாப் பாடகர் இப்ராகிம் ஹமிதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, இரவு 9.40 மணியளவில் விழா நடைபெறும் பூங்காவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அந்த பூங்காவிற்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பையை பரிசோதித்தனர். அப்போது, அந்த பையில் வெடிகுண்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு இருந்த பை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த வெடிகுண்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.
கலாசார நிகழ்ச்சி நடந்த பூங்காவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட பையை வைத்து சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.