போலந்து: 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை 'மம்மி' போல் பாதுகாத்த முதியவர்
|போலந்து நாட்டில் 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை முதியவர் ஒருவர் சோபாவில் வைத்து பதப்படுத்தி, பாதுகாத்து வந்து உள்ளார்.
ராட்லின்,
போலந்து நாட்டின் ராட்லின் பகுதியில் வசித்து வருபவர் மரியான் (வயது 76). இவரது தாயார் கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்து உள்ளார். அவரது இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன.
இந்த நிலையில், அவரது உடலை எடுத்து வந்து தனது வீட்டில் சோபாவில் வைத்து ரசாயன பொருட்களை கொண்டு எகிப்தின் 'மம்மி' போன்று பதப்படுத்தி, மரியான் பாதுகாத்து வந்து உள்ளார்.
அவரது மீது கொண்ட அன்பு மிகுதியால், இதுபோன்று அவர் செய்தபோதும், போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசார் சென்றனர்.
இதில், 13 ஆண்டுகளாக மரியானின் தாயாரின் உடல் பாதுகாக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. சோபாவின் மீது பழைய செய்தித்தாள்களின் குவியலின் மீது உடலை வைத்து இருந்து உள்ளார்.
இதுபற்றி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் ஜோவான்னா ஸ்மார்க்ஜீவ்ஸ்கா கூறும்போது, மரபணு பரிசோதனை அறிக்கைகளின்படி, ஜாத்வீகா என்ற அந்த பெண் 2010-ம் ஆண்டு ஜனவரியில் உயிரிழந்து உள்ளார்.
அதே மாதத்தில் 16-ந்தேதி உடலை புதைத்து உள்ளனர். ஆனால், உடனே அந்த உடலை அவரது மகனான மரியான் எடுத்து சென்று 'மம்மி' போன்று பதப்படுத்தி வைத்து உள்ளார். 2010-ம் ஆண்டில் இருந்து அந்த உடல் அவரது வீட்டில் இருந்து உள்ளது என கூறியுள்ளார்.
எனினும், 13 ஆண்டுகள் கழித்தும் அந்த உடல் சிறந்த முறையில், அப்படியே பாதுகாப்பாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த முதியவர் ரசாயன பொருட்களை பயன்படுத்தி, பாதுகாத்து வந்திருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.