< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் பதவி: நவாஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு திட்டத்தை நிராகரித்த பிலாவல் பூட்டோ
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் பதவி: நவாஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு திட்டத்தை நிராகரித்த பிலாவல் பூட்டோ

தினத்தந்தி
|
19 Feb 2024 2:00 PM IST

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றபோதிலும், அவர்கள் ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது.

இதையடுத்து, ஆட்சியமைப்பதற்காக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்தன. பிரதமர் பதவி, மந்திரிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீபும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

இதுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் பதவி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த திட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இந்நிலையில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பான நவாஸ் கட்சியின் திட்டத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சி நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக, சிந்து மாகாணத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வெற்றி கூட்டத்தில் பிலாவல் பூட்டோ பேசியதாவது:-

முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை அவர்கள் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வகிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு வருடங்கள் நமக்கு கொடுப்பதாகவும் கூறினார்கள். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் இப்படி பிரதமராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தேன். மக்கள் என்னை தேர்ந்தெடுத்தபிறகுதான் நான் பிரதமர் ஆவேன் என்றும் தெரிவித்தேன். அதேசமயம் கூட்டணி மந்திரிசபையில் மந்திரி பதவியும் கேட்கவில்லை.

அரசியல் பதற்றத்தை தணிக்க, அதிபர் தேர்தலில் எனது தந்தை சர்தாரியை எங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர் பதவி ஏற்கும்போது, பதற்றத்தை தணித்து, மத்திய அரசையும், மாகாணங்களையும் பாதுகாப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்