காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்
|கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது 45), கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டான். கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாகக் கரன் பிரார் (வயது 22), கமல்ப்ரீத் சிங் (வயது 22) கரன்ப்ரீத் சிங் (வயது 28) ஆகிய மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். எட்மாண்டன் பகுதியில் வசித்து வந்த அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அமெரிக்க சட்ட அமலாக்க ஏஜென்சிகளுடன் பணிபுரிந்ததாக தெரிவித்துள்ளது. வேறு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
இந்த கைது நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்டூரோ கூறுகையில், "இது முக்கியமான விஷயம். ஏனென்றால் கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஒரு சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாடு. நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு" என்றார்.
நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனடாவின் சீக்கிய சமூகத்தில் பலர் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும், பாகுபாடு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் பாதுகாப்பாக வாழ ஒவ்வொரு கனடியனுக்கும் அடிப்படை உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.