'பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்' - எகிப்துக்கான இந்திய தூதர் பேட்டி
|எகிப்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகள் உள்ளதாக அஜித் குப்தே தெரிவித்தார்.
கெய்ரோ,
பிரதமர் மோடியின் 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், அவர் எகிப்துக்கு இன்று புறப்பட்டு சென்றார். கெய்ரோ விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி நேரில் சென்று வரவேற்றார்.
பிரதமர் மோடியின் எகிப்து பயணம் குறித்து எகிப்துக்கான இந்தியத் தூதர் அஜித் குப்தே அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது;-
"இந்திய பிரதமர் மோடியின் எகிப்து பயணம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்தர்ப்பமாகும். ஏனென்றால், இருநாடுகளுக்கும் இடையிலான இந்திய பிரதமர் ஒருவரின் இருதரப்பு பயணம் இதற்கு முன்பாக 1997-ல் தான் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க எகிப்து பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை உருவாக்கும். பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தா எல்சிசியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.
எகிப்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. இந்த ஆண்டு நடந்த இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து ராணுவ வீரர்கள் அணித்துச் சென்றதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். முதன்முறையாக இருநாட்டு வீரர்களும் ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டது.
எகிப்தில் தங்கி இருக்கும்போது பிரதமர் மோடி ஹிலியோபோலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்கிறார். காமன்வெல்த்தால் கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம் முதல் உலகப் போரின்போது எகிப்தில் நடந்த பல்வேறு போர்களில் உயிரிழந்த 3,799 இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது. அவர்கள் ஒட்டோமான் தாக்குதலில் இருந்து எகிப்தை முக்கியமாக பாதுகாத்தனர்.
அதேபோல் தாவூதி போரா சமூகத்தினரின் உதவியால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அல் ஹக்கிம் மசூதிக்கும் பிரதமர் செல்கிறார். அதேபோல் ஏமனில் உள்ள முதல் உலகப் போரி்ல் உயிர் நீத்த 600 இந்திய வீரர்களுக்கான போர் நினைவு சின்னத்துக்கும் பிரதமர் செல்கிறார். எனவே, அவை ஒரு நெகிழ்ச்சியான தருணங்களாக இருக்கும்" என்று தெரிவித்தார்.