< Back
உலக செய்திகள்
ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்ட 10 அம்ச திட்டம்
உலக செய்திகள்

'ஜி-7' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்ட 10 அம்ச திட்டம்

தினத்தந்தி
|
21 May 2023 5:51 AM IST

‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி 10 அம்ச திட்டம் வெளியிட்டார். இதில், உணவு பாதுகாப்பை பலப்படுத்த உணவு வீணாவதைத் தடுக்க அழைப்பு விடுத்தார்.

ஹிரோஷிமா,

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேனுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி பேச்சு

மாநாட்டின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி, 'பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு ஒன்றாக பணியாற்றுதல்' என்ற அமர்வில கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது கிரகத்தின் மேம்பாட்டுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். சுகாதாரம், ஆரோக்கிய உணவு பாதுகாப்பு மற்றும் பல துறைகள் தொடர்பாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதும் முக்கியம்.

உணவு, சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் 10 அம்ச திட்டங்களை நாம் பின்பற்றியாக வேண்டும்.

வளர்ச்சிக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான பாலம் போல தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நுகர்வோர் சார்பால் கவரப்பட்ட வளர்ச்சி மாதிரி மாற்றப்பட வேண்டும்.

உணவு வீணாவதைத் தடுக்க வேண்டும்...

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலகளாவிய உர சங்கிலிகள் பலப்படுத்தப்பட வேண்டும். இதில் உள்ள அரசியல் தடைகள் அகற்றப்பட வேண்டும். உர வளங்களை ஆக்கிரமித்து வருகிற விரிவாக்க மனநிலையை நிறுத்த வேண்டும். இது நமது ஒத்துழைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.

உணவுகள் வீணாவதைத் தடுக்க வேண்டும். இது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு ஆகும். இது நிலையான உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அத்தியாவசியம் ஆகும்.

உரங்களுக்கு மாற்று

நாம் இன்று நடத்துகிற விவாதங்கள், ஜி-20 மற்றும் ஜி-7 நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே ஒரு முக்கியமான தொடர்பை உருவாக்க உபயோகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

உலகம் எங்கும் உள்ள உரங்களுக்கு மாற்றாக புதிய இயற்கை வேளாண்மை மாதிரியை நம்மால் உருவாக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை நாம் உலகமெங்கும் உள்ள விவசாயிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

ஊட்டச்சத்து, காலநிலை மாற்றம், தண்ணீர் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களை சிறுதானியங்கள் ஒரே நேரத்தில் தீர்க்கும். இது தொடர்பான விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

10 அம்ச திட்டம்

பிரதமர் மோடி தனது பேச்சின்போது உணவு, சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் 10 அம்ச திட்டங்களை பின்பற்ற அழைப்பு விடுத்தார். அது வருமாறு:-

* சிறிய விவசாயிகள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய உணவுதானிய சாகுபடி முறைகளை உருவாக்க வேண்டும்.

* சிறுதானியங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் பலன்களுக்கான பாதை ஆகும்.

* உணவு பாதுகாப்பை பலப்படுத்த உணவுகள் வீணாவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

* உலகளாவிய உர வினியோக சங்கிலிகளில் உள்ள அரசியலை அகற்ற வேண்டும்.

* உரங்களுக்கு மாற்று மாதிரியை உருவாக்க வேண்டும்.

* நெகிழ்வான சுகாதார அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

* முழுமையான சுகாதார பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* உலகம் முழுவதும் சுகாதார வசதி கிடைத்திடுவதை உறுதிப்படுத்த டிஜிட்டல் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

* சுகாதார நிபுணர்கள் போக்குவரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

* நுகர்வோர் சார்பு மாதிரிகளால் உந்தப்படாமல், வளர்ந்து வரும் நாடுகளின் தேவைகளால் ஈர்க்கப்படுகிற வளர்ச்சி மாதிரிகளை கட்டமைக்க வேண்டும்.

இவ்வாறு 10 அம்ச திட்டங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.

மேலும் செய்திகள்