ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: துருக்கி அதிபர் எர்டோகன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
|துருக்கி அதிபர் எர்டோகனை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சமர்கண்ட்,
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார்.
அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி, 70 ஆயிரம் ஸ்டார்ட்-அப்களை உள்ளடக்கிய இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று என தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது இந்தியா- துருக்கி தலைவர்கள் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.