கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
|பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி இரவு விருந்து அளித்து உபசரித்தார்.
தோஹா/புதுடெல்லி:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு கத்தார் சென்றார். சென்றடைந்த சிறிது நேரத்தில் கத்தார் பிரதமரும் வெளியுறவு மந்திரியுமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை சந்தித்து பேசினார்.
"இந்த சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேற்கு ஆசியாவின் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்தனர். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்" என இந்திய வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து மோடிக்கு கத்தார் பிரதமர் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.
இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியின் கத்தார் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.