பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக பட்டய கணக்காளர்கள் செயல்பட வேண்டும் - மந்திரி பியூஷ் கோயல்
|உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ,
இந்திய- அமெரிக்க கூட்டுமுயற்சி மாநாடு மற்றும் இந்தோ- பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவில் உள்ள 6 பகுதிகளில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை (ஐ.சி.ஏ.ஐ) மந்திரி பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது,
இந்தியா தனது வலிமையை மேலும் அதிகரிக்கவும், புவி அரசியல் சூழலில் முக்கிய இடம் வகிக்கவும், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் இந்தப் பயணத்தில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒன்றாக தற்போது திகழ்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் அபரிமிதமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நேர்மையின் பாதுகாவலர்களாக அவர்கள் விளங்குகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு நான்கு கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன்.
ஐ.சி.ஏ.ஐ-இன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட்டு, போட்டி தன்மையுடன் கூடிய விலையில் உயர்தர பொருட்களை இந்தியா வழங்கும் என்ற தகவலை உலக முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உறுப்பினர்கள் பயன்படுத்த வேண்டும், குறிப்பாக அன்பளிப்பாக வழங்க வேண்டும்.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனங்கள் உலகளாவிய கூட்டுமுயற்சிகளை மேம்படுத்தி, சர்வதேச அளவிலான நிறுவனங்களாக மாற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.