பிலிப்பைன்ஸ்: குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - 2 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு
|ஒரே சமயத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது.
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசல் மாகாணம் டெய்டே நகரில் நெரிசலான இடத்தில் டஜன் கணக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
ஒரே சமயத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் அந்த பகுதியே புகை மண்டலமானது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்தால் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.