பிலிப்பைன்சில் பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து - 28 பேர் உயிரிழந்ததாக தகவல்
|தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலர் படகில் இருந்து தண்ணீரில் குதித்துள்ளனர்.
மணிலா,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், சுமார் 7,600 தீவுகளைக் கொண்ட தீவுத்தொகுப்பாக அமைந்துள்ளது. அங்கு தீவுகளுக்கு இடையே நடைபெறும் படகு போக்குவரத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் தீவுகளுக்கு இடையே பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலர் படகில் இருந்து தண்ணீரில் குதித்துள்ளனர்.
அந்த படகில் சுமார் 250 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் 35 பேர் தண்ணீரில் குதித்ததாகவும், 28 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று, தண்ணீரில் குதித்தவர்களையும், படகில் சிக்கியவர்களை போராடி மீட்டனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.