தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் படகுகளை தடுத்து நிறுத்திய சீனா
|தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் படகுகள் சீன கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டன.
மணிலா,
உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளுள் ஒன்றான தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இதனால் அங்கு நீண்ட காலமாக பிராந்திய மோதல் நீடித்து வருகிறது.
அதன்படி அங்குள்ள ஷோல் பகுதியில் சில மிதக்கும் தடைகளை நிறுவி பிலிப்பைன்ஸ் படகுகளை சீனா தடை செய்தது. ஆனால் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் அந்த தடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் இரு வினியோக படகுகளை கடற்படையினர் சர்ச்சைக்குரிய ஷோல் பகுதிக்கு அழைத்து சென்றனர். ஆனால் சீன கடற்படையால் அந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கில்பர்டோ கூறுகையில், 'தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க பிலிப்பைன்ஸ் தயாராக உள்ளது' என எச்சரித்தார்.