கொரோனா தொற்று குறைந்ததால் பிலிப்பைன்சில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு
|பிலிப்பைன்சில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மணிலா,
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
எனினும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
ஆனால் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தது.
நீண்ட காலமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்களின் கல்வி சூழலை மோசமாக்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பிலிப்பைன்சில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு திரும்பினர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் சரிபாதி அளவு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.