பிலிப்பைன்ஸ்: முன்னாள் சர்வாதிகாரியின் மகன், அடுத்த அதிபராக அறிவிப்பு
|பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தல் வெற்றிக்குப்பின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன், அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டார்.
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாங் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படுகிற பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் (வயது 64) அமோக வெற்றி பெற்றார். இவர், அந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்த பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியர் மகன் ஆவார். தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மகன் பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் அதிபர் ஆகி இருக்கிறார்.
அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டு அமர்வில் இவர் அந்த நாட்டின் அதிபராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். அப்போது அவரது 92 வயதான தாயார் இமெல்டா மார்கோஸ், மனைவி, குடும்பத்தினர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் மார்கோஸ் ஜூனியர் கைகளை செனட் சபையின் தலைவரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும் உயர்த்தினர்.
அதைத் தொடர்ந்து மார்கோஸ் ஜூனியர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் தாழ்மையுடன் இருக்கிறேன். மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாம் சரியானவர்களாக இருக்க முடியாது. ஆனால் எப்போதும் சரியாக இருக்க முயற்சிப்போம். நீங்கள் அனைவரும் எனக்காக பிரார்த்தியுங்கள். என்னை வாழ்த்துங்கள். ஏனென்றால் அதிபர் நன்றாக இருந்தால், நாடு நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.
பதவி விலகும் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டேயின் மகள் சாரா டியூடர்டே துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, அவரும் முறைப்படி துணை அதிபராக நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியரும், சாரா டியூடர்டேயும் கொரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கம், வறுமை, சமத்துவமின்மை, இனவாத கிளர்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் நாட்டை வழிநடத்தப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.