பெரு நாட்டில் முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர நாடாளுமன்றம் ஒப்புதல்
|பெரு நாட்டில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் முன்னாள் அதிபர் மீது வழக்கு தொடர நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி விட்டது.
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் அதிபராக இருந்தவர், பெட்ரோ காஸ்டிலோ. இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்தார். ஆனால் நாடாளுமன்றமோ அவரை பதவியை விட்டு நீக்கியது. அதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா போலுவார்டே புதிய அதிபராக பதவி ஏற்றார்.
மேலும் பெட்ரோ காஸ்டிலோ கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 18 மாதம் முன்எச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீதும், 2 முன்னாள் மந்திரிகள் மீதும் ஊழல் உள்ளிட்ட கூட்டுக்குற்றம் செய்ததாக கூறப்படும் குற்றங்களுக்கு எதிரான அரசியலமைப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் 4 மணி நேரம் விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மற்றும் 2 முன்னாள் மந்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 59 ஓட்டுகள் விழுந்தன. 23 பேர் எதிராக வாக்கு அளித்தனர். 3 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
பெருவாரியான வாக்குகள், தீர்மானத்துக்கு ஆதரவாக விழுந்ததால், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி விட்டது.