< Back
உலக செய்திகள்
PM Modi meets Zelensky

Image Courtesy : @narendramodi

உலக செய்திகள்

'பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும்' - ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
14 Jun 2024 6:44 PM IST

பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழி ஏற்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரோம்,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜி-7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் இத்தாலி அரசு, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். இத்தாலில் அபுலியா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று தொடங்கிய ஜி-7 மாநாடு 15-ந்தேதி(நாளை) வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் போர் குறித்து பேசுகையில், மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை இந்தியா நம்புகிறது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான வழி ஏற்படும் என்றும் வலியுறுத்தினேன்"

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்