< Back
உலக செய்திகள்
நீர்யானையிடம் சிக்கி உயிரிழந்த வனச்சரகர்.. வேட்டைக்காரர்களை பிடிக்க சென்றபோது நேர்ந்த துயரம்
உலக செய்திகள்

நீர்யானையிடம் சிக்கி உயிரிழந்த வனச்சரகர்.. வேட்டைக்காரர்களை பிடிக்க சென்றபோது நேர்ந்த துயரம்

தினத்தந்தி
|
23 Nov 2023 12:11 PM GMT

வனச்சரகர் மதேபுவை மீட்பதற்காக சக வனச்சரகர்கள் நீர்யானையை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் நீர்யானை இறந்துபோனது.

தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணம், முகுஜி பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இயற்கை வாழ்விடங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்த பகுதியில், சட்டவிரோத வேட்டைக்காரர்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாப்பதற்காக வனச்சரகர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருட்டத் தொடங்கியபிறகு, வனப்பகுதிக்குள் வேட்டைக்காரர்கள் நுழைந்திருப்பதாக வனச்சரகர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களின் கால்தடங்களை வனச்சரர்கள் கண்காணித்து வந்தனர். கால் தடங்கள் காட்டும் திசையை நோக்கி படிப்படியாக முன்னேறினர்.

அப்போது ஸ்பாமண்ட்லா மதேபு (வயது 31) என்ற வனச்சரகரின் அசைவைக் கண்ட நீர்யானை ஒன்று, அவரை நோக்கி பாய்ந்து வந்தது. சுதாரித்த மதேபு, துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அதற்குள் நீர்யானை அவரை வாயில் கவ்விக் கடித்து குதறியது.

சற்று தொலைவில் நின்றிருந்த சக வனச்சரகர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம், மதேபுவை மீட்பதற்காக நீர்யானையை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் நீர்யானை இறந்துபோனது. எனினும் நீர்யானையிடம் கடிபட்ட வனச்சரகர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

8 வருடங்களாக வேட்டைக்காரர்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வனச்சரகர் ஒருவர், நீர்யானையால் கொல்லப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்