#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு
|உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசு விசாரணை கோரியுள்ளது.
Live Updates
- 31 May 2022 9:15 PM IST
ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வந்து உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் போடப்படுவதாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் தெரிவித்துள்ளார்.
- 31 May 2022 9:10 PM IST
ரஷியாவின் டாட்னெப்ட் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- 31 May 2022 4:20 PM IST
உக்ரேனியப் படைகள் சீவிரோடோனெட்ஸ்கில் நின்றுகொண்டிருக்கின்றன.. குண்டுவீச்சுக்குள்ளான தரிசு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக ரஷியா முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி ரஷியப் படைகள் இப்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்தன.
- 31 May 2022 4:19 PM IST
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போர் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் நின்றபாடில்லை. உக்ரைனில் பல நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பல இடங்களில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.
இதனிடையே, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக 2 ரஷிய ராணுவ வீரர்கள் மீது உக்ரைன் குற்றம் சுமத்தி வழக்கு விசாரணை நடத்தியது. உக்ரைன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் இருவருக்கும் தலா 11 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 31 May 2022 6:05 AM IST
ரஷியா மீதான எண்ணெய் தடைக்கு ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான சார்லஸ் மைக்கேல், உக்ரேனில் போருக்கான ரஷியாவின் நிதியுதவியை குறைக்கும் முயற்சியில், ரஷியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரும் எண்ணெய் இறக்குமதியில் 2/3ஐ தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவித்தார்.
- 31 May 2022 5:44 AM IST
உக்ரைனின் மெலிடோபோல் நகரில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததல் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் எனுறு ரஷிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மெலிடோபோல் நகரை நிர்வாகம் செய்ய ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகே இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக மேயர் இவான் பெடோரோவ் தெரிவித்தார்.
- 31 May 2022 5:30 AM IST
தொழில் நகரை கைப்பற்ற ஆர்வம்
தொழில்நகரமான செவிரோடொனெட்ஸ்க், டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் உக்ரைனின் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. எனவேதான் இந்த நகரை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
செவிரோடொனெட்ஸ்க் நகரை ரஷிய படைகள் குண்டுகளால் துளைத்தெடுத்து வருவதாக லுஹான்ஸ்க் மாகாண ஆளுநர் செர்ஹி ஹைடாய் வேதனையுடன் தெரிவித்தார். ரஷிய படைகளின் குண்டு மழையில் அந்த நகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரஷிய படைகளின் தாக்குதல்களால் செவிரோடொனெட்ஸ்க் நகரில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இடைவிடாமல் தொடரும் தாக்குதல்களால் அந்த நகரில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் பெரும் பீதிக்கும் அவதிக்கும் உள்ளாகியுள்ளனா் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
2 பேர் பலி
இப்படி பல முனைகளிலும் இருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதால் செவிரோடொனெட்ஸ்க் நகரம் உக்ரைனின் மற்றொரு மரியுபோல் நகரமாக மாறும் விளிம்பில் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் ரஷிய படைகளின் கொடூர தாக்குதல்களால் பூமியில் ஒரு சுடுகாடாக மாறியதும், 3 மாத தாக்குதலுக்கு பிறகு அந்த நகரை ரஷிய படைகள் முழுமையாக கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நேற்று காலை நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 5 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்த நகரின் மேயர் தெரிவித்தார்.
உணவு பற்றாக்குறை
இந்த நிலையில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மரியுபோல் நகரில் காரில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் வீரர்கள் நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 13 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியானதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுவதால் சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது.
- 31 May 2022 5:23 AM IST
கிழக்கு உக்ரைன் மீது கவனம்
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 3 மாதங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி கண்ட ரஷிய படைகள் தங்கள் முழு கவனத்தையும் கிழக்கு உக்ரைன் பக்கம் திருப்பியுள்ளனர்.
அங்கு ரஷிய அதிபர் புதினால் சுதந்திர நாடுகளாக அங்கீகரிகப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்கள் அமைந்துள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. இதன்காரணமாக போர் உக்கிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள செவிரோடொனெட்ஸ்க் நகருக்குள் ரஷிய படைகள் நேற்று நுழைந்துவிட்டன. அந்த நகரின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் தங்கள் நிலைகளை ரஷிய படைகள் வலுப்படுத்தி வருவதாகவும், தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை அப்பகுதிக்குள் கொண்டு வருவதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
- 31 May 2022 5:19 AM IST
ரஷியா, உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வர உதவுவதற்கு தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ரஷிய அதிபர் புதின் உடனான உரையாடலின் தெரிவித்துள்ளார். இதற்காக இஸ்தான்புல் நகரில் ரஷியா, உக்ரைன் மற்றும் ஐ.நா.சபை அதிகாரிகளை சந்தித்து பேசவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.