பாலஸ்தீன வாலிபர் தாக்குதல்; இஸ்ரேல் பெண் போலீஸ் மரணம்
|ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 59 காவல் அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில், 1400 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து இருதரப்பினர் இடையே நடந்து வரும் மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில், ஜெருசலேமின் பழைய நகர் அருகே உள்ள காவல் நிலையம் வெளியே, இஸ்ரேல் எல்லை காவல் படையை சேர்ந்த பெண் காவல் அதிகாரி எலிஷேவா ரோஸ் இடா லுபின் (வயது 20) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, 16 வயது பாலஸ்தீனிய பயங்கரவாதி ஒருவர், திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தினார். அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த லுபின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், லுபினுடன் பணியில் இருந்த மற்றொரு காவல் அதிகாரிக்கும் காயமேற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலில், பாலஸ்தீனியருக்கு உதவியாக செயல்பட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என இரு நாட்டு குடிமகளான லுபின், 2021-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்துள்ளார். இந்நிலையில், பாலஸ்தீன பயங்கரவாத தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டார்.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 59 காவல் அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர்.