அமெரிக்காவில் ஜோ பைடனை நோக்கி கண்டன முழக்கம் எழுப்பிய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
|அமெரிக்க அதிபர் பைடனை நோக்கி பாலஸ்தீன ஆதரவாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்,
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. எனினும், ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள தேவாலயத்திற்கு அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் சென்றார். அங்கே பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்க அதிபர் பைடனை நோக்கி கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த ஜோ பைடனை நோக்கி, காசாவில் 16 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், "உங்களைக் கண்டு வெட்கப்படுகிறோம்" என காட்டமாக தெரிவித்தனர்.