இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது
|போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் எத்தனை பேர் போராளிகள், எத்தனை பேர் மக்கள்? என்று காசா சுகாதார அமைச்சகம் விளக்கமாக தெரிவிக்கவில்லை.
டெய்ர் அல்-பலாஹ்:
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் 'அக்டோபர்-7' தாக்குதலை அடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் காசாவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல் அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கிடைக்கும் தகவலின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்துகிறது. இதனால் உயிர்ப்பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 38,011 ஆக உயர்ந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 9 மாதங்களாக நடக்கும் இந்த சண்டையில் 87,000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.
உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களில் எத்தனை பேர் சண்டையிட்டவர்கள் (ஹமாஸ் போராளிகள்), எத்தனை பேர் மக்கள்? என்று விளக்கமாக தெரிவிக்கவில்லை. ஆனால் இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளது.