இம்ரான்கானை 2 நாள் காவலில் எடுக்க உத்தரவு
|இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் தனது பதவிக் காலத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு அமைப்புக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.