< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்

கோப்புப்படம்

உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
23 Dec 2023 5:53 AM IST

அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் சிறையில் இருந்து வந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார்.

இதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வந்தார். இந்த சூழலில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக இந்த மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளான சர்தார் தாரிக் மசூத், அதார் மினால்லா, சையத் மன்சூர் அலி ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் செய்திகள்