பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு
|பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பஞ்சாப் உள்துறை மந்திரி அட்டா தரார் கூறுகையில்,
பஞ்சாப் மாகாணத்தில் தினமும் நான்கைந்து பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சிவில் சமூகம், பெண்கள் உரிமை அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் இந்த விஷயத்தில் ஆலோசனை கேட்கப்படும்.
பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது, மேலும் பள்ளிகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து எச்சரிக்கப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது.
இன்னும் 2 வாரங்களில் அவசரநிலை அமல்படுத்தப்படும். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பது சமூகம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான பிரச்சினை" என்று கூறினார்.
உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2021 தரவரிசையின்படி, 156 நாடுகளில் பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்துதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவையும் பாகிஸ்தானில் பரவலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
2018 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் 5,048 பெண்களுக்கு பணியிட துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019 இல் 4,751 வழக்குகள்; 2020 இல் 4,276 வழக்குகள் மற்றும் 2021 இல் 2,078 வழக்குகள் பதிவாகியுள்ளன.