பாகிஸ்தானில் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைப்பு - பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
|பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்கப்போவதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
60 நாட்களில் பொதுத்தேர்தல்
பாகிஸ்தானில் தற்போது ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் வருகிற 12-ந் தேதியுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. இதனால் அடுத்த தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் தயாராகி வருகிறது. பாகிஸ்தான் அரசிலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த 60 நாட்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் இந்த அவகாசம் 90 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் தலைமையிலான ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக பிரதமர் ஷபாஷ் ஷெரீப் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபர் ஆரிப் ஆல்விக்கு அனுப்புவார். அவர் அதில் கையெழுத்திட்ட உடன் அரசாங்கம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.
காபந்து அரசாங்கம்
ஒருவேளை அதிபர் கையெழுத்திடவில்லை என்றாலும் பிரதமரின் அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். அதேசமயம் அடுத்த அரசாங்கம் அமையும் வரை அங்கு காபந்து அரசாங்கம் தொடரும். இதற்காக கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் காபந்து அரசாங்கத்துக்கு வழங்கும் வகையில் சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
எனவே இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 3 முறை பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப் அடுத்த வாரம் லண்டனில் இருந்து திரும்ப உள்ளதாகவும், வருகிற தேர்தலில் வெற்றி பெற்றால் அவரே பிரதமராக பதவியேற்பார் எனவும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறி உள்ளார்.