< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை அதிகரிப்பு; கால்நடை ஏற்றுமதி மூலம் பாக். அரசுக்கு லாபம்!
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை அதிகரிப்பு; கால்நடை ஏற்றுமதி மூலம் பாக். அரசுக்கு லாபம்!

தினத்தந்தி
|
12 Jun 2022 7:10 PM IST

பாகிஸ்தானில் கழுதை வளர்ப்பில் சீன நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கழுதைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அந்நாட்டின் விவசாயத்திற்கு உதவுவது மட்டுமின்றி பொருளாதாரத்திற்கும் உதவுகிறது.

2021-2022ம் நிதியாண்டிற்கான பாகிஸ்தான் பொருளாதார ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கால்நடைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கழுதைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அங்கு கழுதைகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் என்ற கணக்கில் அதிகரிக்கிறது. கடந்த 2019-20ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 55 லட்சம் கழுதைகள் இருந்த நிலையில், அது இப்போது 57 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்காகக் கால்நடைகளை ஏற்றுமதி செய்வதில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடனில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான், கால்நடை ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முயல்கிறது. இதற்காக கழுதைகள் மட்டுமின்றி செம்மறி, எருமை, வெள்ளாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 80 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன.

கால்நடை வளர்ப்பு மூலம் கிடக்கும் வருவாய் ரூ.5,269 பில்லியனில் இருந்து (2020-21) ரூ.5,441 பில்லியனாக (2021-22) அதிகரித்துள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 3.26% அதிகரித்து உள்ளது. கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அந்நாட்டு அரசு கொள்கை ரீதியிலும் பல முடிவுகள் எடுத்து வருகிறது. கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்நாட்டின் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக வளர்ந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. அங்கு சில மாதங்களாக நிலவிய அரசியல் குழப்பத்தையும் தாண்டி ஜிடிபி வளர்ச்சி 5.97ஆக வளர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் விவசாயத் துறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. விவசாயத் துறை ஒட்டுமொத்தமாக 4.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக பயிர்களின் வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும், கால்நடைகளின் வளர்ச்சி 3.3 சதவிகிதமாகவும் உள்ளது.

கழுதை வளர்ப்பு அதிகரிக்க சீனாவும் ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் சீன மருத்துவத்தில் கழுதை தோல் மற்றும் ஜெலட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.

உலகிலேயே அதிக அளவில் கழுதைகளை வளர்ப்பது சீனா தான். எஜியாவோ எனப்படும் சீன மருந்தை உற்பத்தி செய்ய கழுதை தோல் முக்கியப் பொருளாகப் பயன்படுத்துகிறது. இது சிறந்த ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ரத்த சோகை மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

பாகிஸ்தானில் கழுதை வளர்ப்பில் சீன நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாநிலங்களில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே கூட தனி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்