பொருளாதார பாதை அமைப்பதில் பாகிஸ்தான் காலதாமதம்; சீனா ஆத்திரம்
|சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைப்பதில் பாகிஸ்தான் காலதாமதம் செய்வது சீனாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது.
கராச்சி,
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015-ம் ஆண்டில் சீபெக் என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டம் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமையும் இந்த வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைகள், ரெயில் தடங்கள், குழாய் மூலம் எண்ணெய் வினியோகம் போன்றவை ஏற்படுத்திட சீனா முயன்று வருகிறது. சீனா - மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தவும், தொடர்பு ஏற்படுத்தவும் முயற்சித்து வருகிறது.
ஆனால், பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டு ஜூனில் பெய்தகனமழையால் நகரெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை பாதித்தது.
கனமழையால் கடந்த ஜூனில் இருந்து 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், பாகிஸ்தானில் குழந்தைகள் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய பெருவெள்ளத்திற்கு சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையே காரணம் என அந்நாட்டு நிபுணர்கள் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
ஆரிப் ஹாசன் என்ற கட்டிட வல்லுனர் எழுதியுள்ள தகவலில், முதலில் பல்வேறு சாலைகளின் உயரமும், அது கடந்து செல்ல கூடிய பகுதிகளை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏரிகளில் இருந்து நீர் வெளியேறுவதற்கான வழிகள் இன்றி காணப்படுகின்றன என தெரிவித்து உள்ளார்.
இதுபோக, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை கட்டமைப்பு திட்டம் ஆனது, பாகிஸ்தானில் அதிகம் பாதிக்கப்பட கூடிய பகுதியின் வழியே செல்கிறது. இதனால், பாகிஸ்தானில் பனி உருகுதல், வெள்ளம், நிலச்சரிவு, அதிக அளவில் காடுகள் அழிவது மற்றும் ஆறுகள் முடக்கம் ஆகிய விளைவுகள் ஏற்பட்டு உள்ளன என்று அல்-அரேபியா தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தான் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். அரசும் வளர்ச்சி நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
அந்நாட்டுக்கு கடனுதவிகளை வழங்கும் வகையில் சீனா உதவிட முன்வந்தது. தேவையான ஆதரவையும் நீட்டித்தது. ஆனால், சீனாவுக்கு தேவையான விசயங்களில் ஒன்றான, சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைப்பதில் பாகிஸ்தான் காலதாமதம் செய்வது சீனாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது என சீனதூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அரசுக்கு, சர்வதேச நிதியகத்தின் உத்தரவாதத்துடன் கடன்களை சீனா வழங்கியது. பாகிஸ்தானும், பதிலுக்கு உறுதி அளித்தது. ஆனால், நடைமுறையில் ஒன்றும் நடக்கவில்லை என சீனாவின் மூத்த தூதர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையும் சீனாவை கவலை கொள்ள செய்து உள்ளது. வளர்ச்சி தடைப்பட்டு, பணவீக்கமும் அதிகரித்து உள்ளது.
அந்நாட்டின் ரூபாய் மதிப்பு சரிந்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் போராடி கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த கடன் சூழல் நிலைமை, பல மாதங்களுக்கு நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.
இவற்றுடன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைது நடவடிக்கையால் நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்து உள்ளன. இந்த சூழலில், உள்நாட்டு தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் அரசு திணறலில் உள்ளது. இதில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைப்பதில் பாகிஸ்தான் காலதாமதம் செய்து வருகிறது என்பதில் சீனாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது.