இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி: பாகிஸ்தான் அரசிடம் வர்த்தக அமைப்பு கோரிக்கை!
|பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
வெள்ளத்தைத் தொடர்ந்து சிந்து மற்றும் பஞ்சாபில் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.மொத்த உற்பத்தியில் 25 சதவீத பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாகிஸ்தானில் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் ஜவுளித் தொழிலின் மோசமான நிலையை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை அனுமதிக்க பாகிஸ்தான் வர்த்தக அமைப்பு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாகா எல்லை மூலம் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய அந்நாட்டு அரசிடம் பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் பேல்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (பிடிஈஏ) தலைவர் குர்ரம் முக்தார் தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசின் கூட்டணி மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்தியாவிலிருந்து இறக்குமதியை அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் எடுக்கும் என்று பாகிஸ்தான் மத்திய மந்திரி தெரிவித்தார்.