பாகிஸ்தான்: கோர்ட்டில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை..!!
|பாகிஸ்தான் கோர்ட்டில் இளம்பெண்ணை ஒருவரை அவரது தந்தையே கொடூரமாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கராச்சி நகரை சேர்ந்த டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பின் இருவரும் கராச்சி நகரில் வசித்து வந்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் தந்தை தனது பெண்ணை கராச்சியை சேர்ந்த டாக்டர் கடத்தி சென்றுவிட்டதாக கராச்சி போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறுவதற்காக, அந்த இளம்பெண் நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள கோர்ட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்திருந்த இளம்பெண்ணின் தந்தை கோர்ட்டு வளாகத்துக்குள்ளேயே மகளை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் ஒருவரும் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, மகளை ஆணவக்கொலை செய்த அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகிஸ்தானில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன. பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, கடந்த 10 ஆண்டுக்கு சராசரியாக 650 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.