
பாகிஸ்தான்: வேலையாளை சித்ரவதை செய்த பிரபல பின்னணி பாடகர்; வைரலான வீடியோ

புனிதநீர் நிறைந்த பாட்டிலையே கொண்டு வர கூறினேன் என்று பின்னர் அவர் விளக்கமும் அளித்திருக்கிறார்.
லாகூர்,
பாகிஸ்தானில் பிரபல பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் பதே அலி கான். இனிமையான குரல் வளம் கொண்டவர். கவ்வாலி பாடகராகவும் இருந்து வருகிறார். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள இவர், பாகிஸ்தானில் வெளிவரும் தொடர் நாடகங்களிலும் பின்னணி இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில், அவருடைய வீட்டில் வேலையாள் ஒருவரை அவர் கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.
அவர், அந்த நபரிடம் மதுபானம் வாங்கி வரும்படி வலியுறுத்தி, அடித்து தாக்குகிறார். பலர் முன்னிலையில் காலணியால் அவரை தலையிலும், உடலிலும் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கன்னத்தில் அறையவும் செய்கிறார். அந்த நபர் தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் சத்தமும் கேட்கின்றது.
இதனால், அவர் கொடூர தாக்குதல் நடத்தியது தெரிய வருகிறது. இதனால், பாகிஸ்தான் இசை துறையில் அவரது செயல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் வேலை செய்யும் ஊழியரை தாக்கி, கொடுமைப்படுத்தியது மனிதநேயம் மீறிய செயல் என்றும் மனவருத்தம் ஏற்படுத்துகிறது என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
எனினும், மதுபானம் கொண்டு வரும்படி கூறவில்லை என்றும் மதகுரு ஒருவரால் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்ட புனிதநீர் நிறைந்த பாட்டிலையே கொண்டு வர கூறினேன் என்று பின்னர் அவர் விளக்கமும் அளித்திருக்கிறார்.