பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
|பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள போலீசார், ராணுவ வீரர்கள், வெடிகுண்டு செயலிழிப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இந்த மசூதியில்தான் தொழுகை நடத்துவார்கள். எனவே 4 அடுக்கு பாதுகாப்பை கடந்துதான் இந்த மசூதிக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு மத்தியில் இருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி பலியாகினர். மேலும் குண்டுவெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதனிடையே உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது.
மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானி தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உமர் காலித் குராசானி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததற்கு பழிவாங்கும் வகையில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக உமர் காலித் குராசானியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.