< Back
உலக செய்திகள்
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாகப்பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
உலக செய்திகள்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாகப்பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

தினத்தந்தி
|
5 March 2023 5:17 AM IST

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாகப்பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜெனீவா,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச்செயலாளர் சீமா புஜானி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்தை செய்வதற்கு மீண்டும் இந்த சிறப்பான மன்றத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் புகலிடம் கொடுத்துள்ள தனித்துவமான வேறுபாட்டைத்தான் பாகிஸ்தான் கொண்டிருக்கிறது.

சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.வால் தடை செய்யப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் ராணுவ அகாடமி அருகேதான் வாழ்ந்தார். சர்வதேச பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை பல்லாண்டு காலமாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள்தான் வளர்த்து விட்டன. புகலிடமும் தந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்