உலகின் ஆபத்தான நாடு என ஜோ பைடன் விமர்சனம்: அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
|உலகின் ஆபத்தான நாடு என ஜோ பைடன் விமர்சனம் செய்திருந்தநிலையில் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.
இஸ்லாமாபாத்,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, "பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று, ஏனெனில் அந்த நாடு எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டுள்ளது" என கூறினார். பாகிஸ்தான் குறித்த ஜோ பைடனின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஜோ பைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது.
இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், "ஜோ பைடனின் கருத்து ஆச்சரியமடைய செய்துள்ளது. அவரது கருத்து ஈடுபாடு இல்லாத தவறான புரிதலால் உருவானது. இந்த விவகாரத்தில் அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கப்பட்டது. எனினும் இது அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை" என கூறினார்.