< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Image Courtesy : AFP

உலக செய்திகள்

பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தினத்தந்தி
|
8 Feb 2024 7:18 PM IST

மொத்தம் 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இஸ்லாமாபாத்,

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

பாகிஸ்தானில் மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஒரு தொகுதியில் வேட்பாளரின் மரணம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தானில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்