< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான்:  கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
உலக செய்திகள்

பாகிஸ்தான்: கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தினத்தந்தி
|
6 Jun 2024 9:55 AM IST

பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் சிகிச்சை அளிக்க போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் இல்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஐதராபாத்,

பாகிஸ்தானில் பரீதாபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் ஜீஷன் என்பவரின் மகள் அலிஷா (வயது 17), அர்ஷத் என்பவரின் மகன் உமைர் (வயது 15), முபாரக் என்பவரின் மகன் அப்பாஸ் அலி (வயது 14) மற்றும் மெஹர் பாக்ரி என்பவரின் மகன் தோடா (வயது 25) ஆகிய 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

ஜீஷனின் மகன் முகமது ஹசன் என்ற அலி ஹைதர் இந்த வெடிவிபத்தில் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், மகளும் உயிரிழந்து விட்டார். 5 வயது மகள் கின்ஜா சிகிச்சை பெற்று வருகிறார். முறையான அனுமதி இன்றி கியாஸ் சிலிண்டர் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன என அரசு நிர்வாகம் கூறி வருகிறது.

சட்டவிரோத, கியாஸ் மற்றும் சி.என்.ஜி. நிரப்பு நிலையங்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி துறை நிறுவன உயரதிகாரிகளுக்கு காவல் துணை ஆணையாளர் ஜெய்ன் உல் அபிதின் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டவிரோத விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை செயலாளருக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இதேபோன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் உள்ளிட்டவை இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 20 ஆண்டுகளாக தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய கட்டிட வசதிகள் இல்லை என டாக்டர் தஹீர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்