சீன அதிபராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் - பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என பாகிஸ்தான் வாழ்த்து!
|சீன அதிபர் ஜி ஜின்பிங்கை "பாகிஸ்தானின் உண்மையான நண்பர்" என்று பாகிஸ்தான் அதிபர் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபத்,
சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார். இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், சீன அதிபராக 3-வது முறையாக தேர்வாகியுள்ள ஜி ஜின்பிங்கிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஒட்டு மொத்த பாகிஸ்தான் தேசத்தின் சார்பாக அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இது அவரது சாமர்த்தியமான பணி திறனுக்கும், சீன மக்களுக்குச் சேவையாற்றுவதில் அவரது அசைக்க முடியாத பக்திக்கும் கிடைத்த ஒரு பிரகாசமான கவுரவம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதே போல, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை "பாகிஸ்தானின் உண்மையான நண்பர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.